நீதி மறுத்திடினும்…

February 6, 2014

நீதி மறுத்திடினும் எங்கள் நினைவை மறந்திடினும்
வாது உரைத்திடினும் எங்கள் வாழ்வைப் பழித்திடினும்
காதல் அழித்த பிழை ஒரு கூடல் எரித்த கதை
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

போதி மரத்தின் புயல் பல வேதம் மறுத்ததுவும்
கோதி விரித்த முடி கொடுங்கோலைக் குலைத்ததுவும்
காதி உடுத்தியவன் புது கனவு சமைத்ததவும்
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

பாதி கொடுத்தரனார் சரி நீதி நிறுத்தியதும்
கோதில் குணத்தரவான் அரி காதல் நிகழ்த்தியதும்
மோத வரும் படையை ஒரு பேடி அடக்கியதும்
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

யாதவன் முன்னழகும் அவன் ஊதிடும் பண்ணழகும்
நாதனின் பிரிவில் எழும் பல வேதனை எண்ணங்களும்
காதலில் கசிந்துருகி கவி பாடிடும் பெருமரபை
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

மாதர் மனத்துறையும் உயர் காதல்வழிப் புனிதம்
ஓதும் நதிக்கதையால் பாகீரதி ஆனதுவும்
மாதவ-சிவ ஸ்ருதியில் மகர ஜோதி மலர்ந்ததுவும்
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

ஆதி அருந்துறவி ஒரு வாதம் வகுத்ததுவும்
பாதிமலர்ப் பெரியோன் பல பேதம் நகைத்ததுவும்
வேதை அகற்றியதோர் மாவீரம் இயற்றியதும்
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

நீதியுறுத்தி ஜலால் ஸதி ரீதி மறுத்ததுவும்
வீதியுடுத்தியவன் ஒரு வேந்தை நகைத்ததுவும்
காதல் மிகுத்தொருவன் `மாதோ’வை  விளித்ததுவும்
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

ஆதி அசோகனுடை அறத்திகிரி திகழ்த்துவசம்
ஜாதி மறுத்து எழும் நவ ஸாஸன ஸத்-ஸ்பரிஸம்
மேதினியில் பெரிதாய் ஜன நாதமதன் முரசம்
ஓதி வளர்ந்தனம் நாம் ஓய்வோமென நினைத்தாயோ ?

வியாதி வறுத்திடினும் எம்மை பீதியுறுத்திடினும்
தீது மனங்கொண்ட பேதை சமூகம் பேசி நகைத்திடினும்
நீதி நலிந்து நிராதரவாய் நடு வீதியில் நின்றிடினும்
பேதம் மறுத்தெழுந்தோம் எனும் கீதம் மறைந்திடுமோ ?

புவியன் நம்பி

377Slashrainbow

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: