பயம் :
ஏதோவோர் விதிசெய்ததில் கலவாரைத்
தீதேயென முழங்கித்தனியே வைத்து
வேதம் இதுவேயெனவும் வழக்குரைத்து
பேதம்பல சொல்லி அன்பைப்பழிசெய்து
நீதிமறந்து  நிலைதவறிப் பொய்வழிக்
காதல்சொல்லிப் பதைபதைத்து நின்றப்
பேதையர் பயமகலப் பெருகியத் திரளிதுவோ.

வீரம் : 
வண்ணம்பல அணையும் அன்புக்கொடிதாங்கி
மண்ணிலோர் மானுடம் வாழ எங்கும்
பெண்ணியம் தங்க பால்பணம்பரம்பரை கருதா
நண்ணிக்காதல் செயுமோர் நல்வழிப் பெருக
திண்ணிய நன்னடை திமிர்ஞானச் செருக்கு
கண்ணிய நோக்கு பயமறியா நெறிகளென
எண்ணியப் புலவன்வழி ஆடிவருந்திரளோ ஆர்கலிதானோ .

சிருங்காரம்:
நிசிநடுவில் நினைவுற்று நெடுமூச்சு நெஞ்சில்
புசிபடப் பறந்தமனம்  அல்லல் தனிமையெனும்
பசியதனில் படர்ந்துவிழ நாடுநட்புறவுவீதி
வசைவருமோ எனக்காதல் வெறுத்துலவும்
திசையறியாய்  தெளியாயோ தாழ்கதவம் திறவாயோ
இசைமுரசம் பயின்றுனது இதயத்தை மீட்டவரும்
விசைநடையர் வீரர்திரள் வந்ததுகாண் இவ்வழியாய்.

பீபத்ஸம்:
தன்னினத்தைக் காதலித்த தவறிலாத் தனியோரை
முன்னம் யூதருடன் முழுதே சிறையெடுத்த
மன்னன் கொடுங்கோலன் வண்ணத்திரிகோணச்
சின்னம்பதித்தச் சிறுமையும் சிவப்புதிர சேறிஃதே
என்னச்செய் படுகொலைகள் பற்பலவும் கண்ட
பின்னுமந்நினைவில் இன்ப இளஞ்சிவப்பை
தன்னதாக்கியத் தகைமை வரும்வடிவு காணீரோ.

ரௌத்திரம்:  
அணங்கையவள் காதலித்தால் அன்புதானாகாதோ ?
இணங்குமனம் இரண்டென்னில் இருள்விதியோ இங்கிடுக்கண் ?
மணங்களெலாம் மனயிசைவு மறுத்திடில்பின் மணமாமோ?
குணங்கழிந்தக் குறுமதியர் கூறுமடக் கருத்தெல்லாம்
பிணங்காது பாரெங்கும் பிதற்றிவரும் பாவியர்கை
ரணங்களையே ரத்தினமாய் ரசித்தணியும் ரகமிதெனத்
திணங்கமழும் திருனர்திரள் தீக்கனலாய்த் துணிந்ததுகாண்.

காருண்யம் :
நிலையில்லா வாழ்வுதன்னில் பொய்யைப் புண்ணியம் செய்து
மலையாய கொடுங்கோலர் மேலையர் ஆளுமைகீழ்
கலையிகழ்ந்து  கருத்திழந்து தன்கவிமரபைத் தான்மறந்து
தலையாய நபியொருவன்  தந்தயிறைவாக்கின் பேரால்
வலைவலையாய் வாதம்பின்னிக் காதலையே குற்றம்கண்டு
கொலையும் கொடுமையும் கோதிலார்மாட்டிழைத்தீர்
நிலையறியீர் நியாயத்திரள் வருவது காணீரோ .

ஹாஸ்யம் :
சற்சுகளில் சாத்திரஞ்சொல்லி சரிசமானமென்னும்
பொற்சிலுவை பிரானின் பொருள் பொதிந்தவுரைமறுத்து
பற்பல பாவம் பண்ணி புண்ணியன் பேரைச்சொல்லித்
தற்பெருமை  தானேகூறும் தரிசுதர்க்கந் தானுதிர
கற்சுவர் கலகந்தன்னில் காவலர்மேல் காசெறிந்து
நற்சுவையோடு  நகைத்தவரை நண்ணி நின்ற
அற்புதநடனநீதி அறிவித்தோம் அகிலமெங்கும் .

ஆனந்தம்-அற்புதம் :
வானவில் ஆனிப்பீடு வந்ததுகாண் மானுடமே  தன்-
மானமுளோர் அழைக்கின்றார் மோனங்கலையாயோ
மேனியிலே நிறம்தடவி  சேனைபோல் அணிவகுத்து
கானம் கொணராயோ நானிலந்தான் களிகூர
தேனினிய நீர்நிலையாம் கானகத்தனிச்சுனை
மீனோடு ஓடிவந்து  தானேநதியானதுபோல்
ஞானநிலைக்குரியாய் நீநடந்துவாராயோ .

சாந்தம் :
அரிதுஅவாவுற்ற அரியர்க்(கு) அமைதி கேட்டு
உரிதுஉரிமையென உலகெலாம் தெரியக் கேட்டு
சரிதவறு இதுவென்று சமரச சத்(தி)யம்வாழ
விரிபுவியில் நீதிகாணும் நிலையென்றும் வளரக் கேட்டு
பரிவென்றும் மாறாநல்மதியர் உறவு கேட்டு
மரிவுவரில் மானுடம் கலையாது பிரியக் கேட்டு
பெரியவிதி உதவட்டும் எனக்கேட்டு நடைபயின்றோம்.

வாத்ஸல்யம் :
வேறினம் காதலியேன் வெறுப்போயெனக்
கூறிக்கைப்பிசைந்து கண்ணீரில்நின்றமக !
மாறிடுமோ அன்பு மாயங்களோ மமதை
ஆறெனப்பெருகவள்ளி அள்ளியணைத்ததுவும் பழச்
சாறுண்பயோ இனியச்சுளையுண்பயோ இல்லைப் பாலுண்பயோயெனத்
தூறல்மழைமாலைத் தூக்கிப்புகட்டியதும் நானல்லவோ நீ
பேறென வந்திங்கு பரவசம் தந்தவகைப் பேசிட நடந்தேன்யான்.

பக்தி :  
தனியே வைத்தாய் என்னை விதிமுதலே
இனிமை மாறாத இன்பம்சேர் விதையில் வாழைக்
கனிபோலும் காசினியில் களிபரவக் கட்டளையோ
பனிமலையும் பாலையும் பெருங்கடலும் பொந்துகளும்
குனிவறியா மரமும் கூடிய உயிரிசையும்
நனிநிறமும் நறுமணமும் கலவிக்களிவழியும்
மனித அறிவொளியும் இன்பமென அருளிவருமிறையே.

புவியன் நம்பி

Advertisements